ரஜினி படப் பெயர் குசேலன்? 18.1.08 
மலையாளத்தில் மம்மூட்டி, சீனிவாசன் நடித்து வெற்றி பெற்ற படம் `கதா பறையும் போல்'. இதை, கே.பாலசந்தரின் கவிதாலயா, மலையாள பட நிறுவனமான செவன் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறது. பி.வாசு இயக்குகிறார். படம் பற்றி அறிவிப்பை நேற்றுமுன்தினம் பி.வாசு வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியது, கடந்த டிசம்பர் மாதம் `கதா பறையும் போல்' என்ற மலையாள படம் பார்த்தேன். மம்மூட்டி, சீனிவாசன் நடித்திருந்தனர். இதை தமிழில் எடுத்தால் மம்மூட்டி பாத்திரத்தில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அவர் நடிப்பதாக இருந்தால் மட்டும் இதை தமிழில் இயக்குவது என்று எண்ணினேன். பிறகு அவருக்கு படத்தை காட்டினோம்.அவருக்கு பிடித்திருந்தது. நிச்சயம் செய்யலாம் என்றார். அவர் சம்மதித்த பிறகு இதை இயக்க முடிவு செய்தேன்.
தமிழுக்காக திரைக்கதை மாற்றம் செய்யப்படும். கவுரவ வேடம், மெயின் கேரக்டர் என்றில்லாமல் முக்கியமான கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். அவரை சுற்றித்தான் முழுகதையும் இருக்கும். படத்துக்கு 'குசேலன்' உட்பட பல பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. தெலுங்கில் இதை அஸ்வினிதத் தயாரிக்கிறார். பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கி ஜூலை மாதத்தில் முடிவடையும். இவ்வாறு பி.வாசு கூறினார். பேட்டியின்போது இயக்குனர் கே.பாலசந்தர், மலையாள நடிகர்கள் முகேஷ், சீனிவாசன், பட தயாரிப்பாளர்கள் புஷ்பா கந்தசாமி, அஸ்வினிதத், ஜி.பி.விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர். |