பெர்த்தில் சாதித்தது இந்தியா 20.1.08 
பெர்த் டெஸ்டில் 72 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, தொடர்ந்து 17வது டெஸ்டில் வெற்றி பெற்று புதிய உலக சாதனை படைப்போம் என்று மார்தட்டிய பான்டிங் அண்ட் கோவின் கனவு தகர்த்தப்பட்டது.
கும்ப்ளே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. மெல்போர்ன் மற்றும் சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில்வென்ற ஆஸி. அணி 2&0 என்று முன்னிலை வகித்தது. சிட்னி டெஸ்டில் நடுவர்கனின் பல தவறான முடிவுகளால் இந்தியா தோற்றது. ஆஸி. பத்திரிகைகளும் நடுவர்களின் தீர்ப்பைபடுமையாக விமர்சித்தன. மேலும், ஹர்பஜன் மீது இனவெறி குற்றச்சாட்டை ஆஸி. வீரர்கள் சுமத்தினர். இதை விசாரித்த போட்டி நடுவர் பிராக்டர், 3 டெஸ்டில் விளையாட ஹர்பஜனுக்கு தடை விதித்தார்.
இதற்கு சக இந்திய வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு ஹர்பஜன் தடையை நீக்காவிட்டால் இந்திய அணிநாடு திரும்பும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை (ஐசிசி) எச்சரித்தது. பாகிஸ்தான், இலங்கை உட்பட பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேறுவழிஇல்லாமல் ஹர்பஜன் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஐசிசி அறிவித்தது.
இப்படி பலத்த சர்ச்சைக்கு இடையே 3வது டெஸ்ட் பெர்த்தில் கடந்த 16ம் தேதி தொடங்கியது. பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஆஸி. அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. மேலும், பெர்த் டெஸ்டில் இந்தியா பரிதாபமாக தோற்கும் என்று ஆஸி. பத்திரிகைகள் விமர்சனம் செய்தது. இதுவரை தொடர்ச்சியாக 16 டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளோம். தொடர்ந்து பெர்த் டெஸ்டிலும் வெற்றி பெற்று புதிய உலக சாதனை படைப்போம் என்று ஆஸி. கேப்டன் பான்டிங் மார்தட்டினார். ஆனால், இந்திய வீரர்கள் யாரும் இந்த விமர்சனங்களுக்கு பதில் கூறாமல் அமைதி காத்தனர்.
இந்நிலையில், பரபரப்பான 4ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பான்டிங், ஹ¨சே இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். பான்டிங் 45 ரன் எடுத்த நிலையில் இஷாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த எம். ஜே. கிளார்க், சிறப்பாக விளையாட ஆஸி. நிதானமாக ரன் எடுத்து வந்தது. ஹ¨சே, 46 ரன் எடுத்து ஆர்.பி. சிங் பந்தில் அவுட் ஆனார். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த போதிலும் கும்ப்ளே, சேவாக் இருவரும் பந்து வீச வந்தனர்.
சைமண்ட்ஸ் (12) விக்கெட்டை கும்ப்ளேவும், கில்கிறிஸ்ட் (15), பிரெட் லீ (0) விக்கெட்டை சேவாக்கும் வீழ்த்த போட்டி இந்தியாவுக்கு சாதகமாக மாறியது. அசத்தலாக விளையாடி வந்த கிளார்க்கின் (81) விக்கெட்டை கும்ப்ளே வீழ்த்த இந்தியாவின் வெற்றி உறுதியானது. ஆனால், 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜான்சன், எஸ்.ஆர். கிளார்க் ஜோடி இந்திய பந்துவீச்சை பவுண்டரியும், சிக்சருமாக விளாச வெற்றி பறி போய்விடுமோ என்ற இந்திய ரசிகர்கள் பயந்தனர்.
கேப்டன் கும்ப்ளே, 2வது புதிய பந்தை எடுத்தார். பதான் வீசிய பந்தில் கிளார்க் ஆட்டமிழக்க இந்திய வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கிளார்க் 32 ரன் (35 பந்து, 3 புவண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 73 ரன் சேர்த்தது. அடுத்து வந்த டெய்ட், 4 ரன் எடுத்த நிலையில் ஆர் . பி. சிங் பந்தில் போல்டாக ஆஸி. யின் இன்னிங்ஸ் 340 ரன்னில் முடிவு பெற்றது.
இதையடுத்து 72 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஜான்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 50 ரன் (80 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். டெஸ்டில்ஜான்சன் அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும். இந்திய தரப்பில் பதான் 3, ஆர் . பி. சிங், கும்ப்ளே, சேவாக் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக இர்பான் பதான் தேர்வு செய்யப்பட்டார். ஆஸி. 2&1 என்று முன்னிலை வகிக்கிறது.
இத்தொடரின் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் அடிலெய்டில் 26ம் தேதி தொடங்குகிறது. |