TNLworld.com TNLworld.com Menu News Sports Cinema Wallpaper Useful Links
Sports                                                           Email This Article To A Friend!
மழையால் ஆட்டம் ரத்து
4.02.08







முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டது. ஆஸ்திரேலியா 26 ஓவரில் 141 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அந்த அணி 7.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 51 ரன் எடுத்தபோது கனமழை பெய்ததால் ஆட்டம் ரத்தானது.

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் நேற்று மோதின. இந்திய அணியில் மனோஜ் திவாரி, ஆஸி. அணியில் நாப்கே அறிமுக வீரர்களாகக் களமிறங்கினர்.

பிரிஸ்பேனில் பகல்/இரவு ஆட்டமாக நடந்த இப்போட்டியில், இந்தியா டாசில் வென்று முதலில் பேட் செய்தது. சேவாக் 6 ரன் எடுத்து பிரேக்கன் பந்தில் வெளியேறினார். சச்சின் 10 ரன் எடுத்த நிலையில், பிரெட் லீ பந்தை பின்காலில் சென்று செலுத்தி ஆட முற்பட்டபோது ஸ்டம்பில் கால் பட்டு பெயில் எகிற ‘ஹிட் விக்கெட்’ முறையில் (408 போட்டியில் முதல் முறை) ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டிகளில் ‘ஹிட் விக்கெட்’ ஆகும் 3வது இந்திய வீரர் சச்சின். முன்னதாக நயன் மோங்கியா, கும்ப்ளே ஆகியோர் இவ்வாறு ஆட்டம் இழந்துள்ளனர். கம்பீர், ரோகித் ஷர்மா ஜோடி 3வது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. கம்பீர் 39, ரோகித் 29 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த திவாரி 2, உத்தப்பா 5 ரன்னில் வெளியேற இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்து தடுமாறியது.

கேப்டன் டோனி, பதான் ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க போராடியது. பதான் 21 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். டோனி 37 ரன் (61 பந்து, 1 பவுண்டரி) எடுத்தார். அதிரடியாக விளையாடிய ஹர்பஜன் 27 ரன் (19 பந்து, 3 பவுண்டரி) எடுத்து லீ பந்தில் கிளார்க் வசம் பிடிபட்டார். ஸ்ரீசாந்த் 4 ரன் எடுத்து ரன் அவுட் ஆக, இந்திய அணி 45 ஓவரில் 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இஷாந்த் 1 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

ஆஸி. பந்துவீச்சில் பிரெட் லீ அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட் (9&2&27&5) வீழ்த்தினார். பிரேக்கன், நாப்கே, ஜான்சன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். மழை காரணமாக ஆட்டம் தடைபட்டதால், ஆஸி. 43 ஓவரில் 192 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 33 ரன் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. கில்கிறிஸ்ட் 14 ரன் எடுத்து ஸ்ரீசாந்த் பந்தில் டோனி பிடிக்க ஆட்டமிழந்தார். நடுவரின் முடிவுக்காக காத்திராமல், கில்கிறிஸ்ட் உடனடியாக வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மழை பெய்ததால், 26 ஓஅவ்ரில் 141 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ஹோப்ஸ் 17 ரன் எடுத்து இஷாந்தின் அற்புதமான ஸ்விங் பந்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். அடுத்து ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் ஆஸி. கேப்டன் பான்டிங் டக் அவுட் ஆகி வெளியேற அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன் எடுத்து திணறியது. ஆஸ்திரேலியா 7.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 51 ரன் எடுத்த நிலையில் கனமழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். எம்.கிளார்க் 2, சைமண்ட்ஸ் 5 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. நாளை நடக்கும் 2வது போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் (பகல்/இரவு) மோதுகின்றன.
  © 2006 - 2007 TNLworld.com