சானியா & பூபதி ஜோடி தோல்வி
28.1.08

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிக் சாம்பியன் பட்டம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி & சானியா மிர்சா ஜோடி 2வது இடம் பிடித்தது.
பிரபல கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸி. ஓபன் மெல்போர்ன் நகரில் கடந்த 2 வாரமாக நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர்கள் பெடரர், நடால் ஆகியோர் அரை இறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
நேற்று நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிக் உடன் பிரான்ஸ் வீரர் ஜோ வில்பிரைடு சோங்கா மோதினார். டென்னிஸ் களத்தில் இவர்கள் மோதுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அபாரமாக விளையாடிய சோங்கா முதல் செட்டை 6&4 என்ற கணக்கில் கைப்பற்றினார். எனினும், அடுத்த இரண்டு செட் ஆட்டங்களில் கடும் நெருக்கடி கொடுத்த ஜோகோவிக் 6&4, 6&3 என வென்று முன்னிலை பெற்றார்.
இதையடுத்து 4வது செட் ஆட்டம் இழுபறியாக நீடித்தது. இரு வீரர்களுமே தங்கள் சர்வீசில் புள்ளிகளைக் குவித்ததால் போட்டி கடுமையாக இருந்தது. டைபிரேக்கரில் அபாரமாக விளையாடிய ஜோகோவிக் 7&6 (7&2) என்ற கணக்கில் வென்று முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச் சென்றார்.
கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் முதல் செர்பிய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. கடந்த 11 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பெடரர், நடால் இருவர் மட்டுமே சாம்பியன் பட்டம் பெற்று ஆதிக்கம் செலுத்தி வந்ததை முறியடித்தார்.
முன்னதாக நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் சானியா & பூபதி ஜோடி 6&7 (4), 4&6 என்ற நேர் செட்களில் சீனாவின் டான்ஷியான் சன் & நேனட் ஜிமான்ஜிக் (செர்பியா) ஜோடியிடம் போராடித் தோற்றது. முதல் செட்டில் 4&3 என்ற கணக்கில் முன்னிலை வகித்த சானியா&பூபதி ஜோடி, பதற்றமாக விளையாடி கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது. சானியா முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் இறுதிப் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
|