டிராவில் முடிவடைய வாய்ப்பு !
28.1.08

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளிடையே அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடக்கும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, டிராவில் முடிய அதிக வாய்ப்புள்ளது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கவுள்ள நிலையில், இந்தியா 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் ஆஸி. அணி 2&1 என முன்னிலை வகிக்க, 4வது டெஸ்ட் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடக்கிறது.
டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 526 ரன் குவித்தது. சச்சின் அபாரமாக விளையாடி 153 ரன் விளாசினார். அடுத்து களமிறங்கிய ஆஸி. அணி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 322 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர் ஹேடன் 103 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் பான்டிங் 79, மைக்கேல் கிளார்க் 37 ரன்னுடன் நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். அபாரமாக விளையாடிய பான்டிங் டெஸ்ட் போட்டிகளில் தனது 34வது சதத்தை பூர்த்தி செய்து கவாஸ்கர் (இந்தியா), லாரா (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோரின் சாதனையை சமன் செய்தார். சச்சின் 39 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அவரைத் தொடர்ந்து மைக்கேல் கிளார்க்கும் சதம் அடித்தார். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 210 ரன் சேர்த்தனர். பான்டிங் 140 ரன் (266 பந்து, 10 பவுண்டரி), கிளார்க் 118 ரன் (243 பந்து, 8 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்த டெஸ்டுடன் ஓய்வு பெறும் துணை கேப்டன் கில்கிறிஸ்ட் 14 ரன் எடுத்து பதான் பந்தில் சேவாக் கேட்ச் செய்ய ஆட்டமிழந்தார். பெவிலியன் திரும்பிய அவருக்கு, அடிலெய்டு ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்திய வீரர்களும் வரிசையாக நின்று கைதட்டி அவரை வழியனுப்பினர்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, ஆஸி. அணி முதல் இன்னிங்சில் 563 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா பந்துவீச்சில் பதான், இஷாந்த் தலா 3, சேவாக் 2, ஹர்பஜன், கும்ப்ளே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்சில் 37 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 4ம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்துள்ளது. பதான் ரன் ஏதும் எடுக்காமல் ஜான்சன் பந்தில் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். சேவாக் 31, டிராவிட் 11 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
ஒருநாள் ஆட்டம் மட்டுமே மீதமுள்ள நிலையில், இந்த டெஸ்ட் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஆஸி. அணி 2&1 என்ற கணக்கில் தொடரை வென்று பார்டர் & கவாஸ்கர் டிராபியை தக்கவைத்துக் கொள்கிறது.
அடிலெய்டு டெஸ்ட் 4வது நாள் ஆட்டத்தில், மூன்று ரசிகர்கள் களத்தில் இறங்கி அமர்க்களம் செய்தனர். சைமண்ட்ஸ் பேட் செய்தபோது ஒரு ரசிகர் குரங்கு போன்ற முகமூடி அணிந்து மைதானத்துக்குள் ஓடினார். ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை ஆஸி. போலீசார் வெளியேற்றினர்.
|